ஆர்.எஸ்.எஸ். போலவே அகண்ட பாரதக் கனவில் கமலஹாசன் - தோழர் பெ.மணியரசன்
கடந்த 18.10.2015 அன்று சென்னையில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின்போது, வாக்களிக்க வந்த நடிகர் கமலஹாசனிடம், “தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை, ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்ற வேண்டுமென்று கூறுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “பெயரை மாற்ற வேண்டியதில்லை. வேண்டுமானால் ‘இந்திய நடிகர் சங்கம்’ என மாற்றிக் கொள்ளலாம்” என கமலஹாசன் விடையளித்தார்.
அப்பொழுது, பெயர் மாற்றம் வேண்டுவோரை மறுத்து ஏட்டிக்குப் போட்டியாக இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று பதிலளிக்கிறார் கமலஹாசன் என்று பொதுவாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலை இருந்தது.
ஆனால், நேற்று (03.11.2015) ஹைதராபாத்தில் கொடுத்த செவ்வியில், கமலஹாசன் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அகண்ட பாரதக் கனவில் மெய்யாகவே இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
இந்துத்துவா சக்திகளிடம் சகிப்புத்தன்மையில்லையே என்று கேட்டதற்கு கமலஹாசன், “பா.ச.க.விடம் மட்டுமல்ல காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் லீக் போன்றவர்களிடமும் சகிப்புத்தன்மையில்லை” என்று பதில் அளித்துள்ளார்.
இந்துத்துவாவின் பெயரால் இப்பொழுது கல்புர்கி, பன்சாரே, அத்லாக் போன்றவர்களைப் படுகொலை செய்ததுடன், அரியானாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் வீட்டைக் கொளுத்தி 2 குழந்தைகளைத் தீக்கிரையாக்கிய வன்முறைகள் அரங்கேறிக் கொண்டுள்ள பின்னணியில் கேட்கப்படுகின்ற கேள்விக்கு, காங்கிரஸ் – முஸ்லிம் லீக் என எல்லோரையும் சேர்த்து யாருக்குமே சகிப்புத்தன்மையில்லை எனக் கூறி, சங் பரிவார நிகழ்கால வன்முறைகளை மற்றவர்களுடன் இணைத்து சமப்படுத்தி, சங் பரிவாரங்களின் மீது எழும் சீற்றத்தை மடைமாற்றி, பலருக்குமாக பகிர்ந்து விடுகிறார்.
அத்துடன், 1947இல் சகிப்புத்தன்மை இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது, இந்தியா பிரியாது இருந்திருந்தால், சீனாவைவிட மக்கள் தொகை கூடுதலாக உள்ள நாடாகி, சீனாவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கும் என்று, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின், அகண்ட பாரதக் கனவை அப்படியே கூறுகிறார் கமலஹாசன்.
“நீங்கள் பெற்றுள்ள விருதை திருப்பி அளிப்பீரா?” என்று கேட்டதற்கு, யாருமே விருதுகளைத் திருப்பித் தர வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் கருத்துகளை கட்டுரையாக வெளியிட்டிருக்கலாம், அது பெரியத் தாக்கத்தை உண்டாக்கி இருக்கும் என்கிறார்.
மத அடிப்படையில் நடக்கும் படுகொலைகளைக் கண்டு, நெஞ்சு பொறுக்காமல் அப்படுகொலைகள் மற்றும் இந்துத்துவா தீவிரவாத நடவடிக்கைகள் மேலும் பரவாமல் தடுக்க, இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனம் பொருமி, இந்திய அரசுக்குத் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த, படைப்பிலக்கியத் துறையைச் சேர்ந்தவர்களும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், அறிவியல் துறையைச் சேர்ந்தவர்களும், தாங்கள் வாங்கிய விருதுகளைத் திருப்பி அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கமலஹாசனுக்கு அவ்வாறான அறச்சீற்றம் எதுவுமில்லை. இவ்வாறான சகிப்பின்மை நடவடிக்கைகள் காங்கிரசு – முஸ்லிம் லீக் – பா.ச.க போன்றவற்றிற்கு பொதுவானது என்று அமைதியடைகிறார். விருதுகளைத் திருப்பி அளிப்பதற்கு பதிலாக சகிப்பின்மையை எதிர்த்து, அவரவர் சார்ந்த துறையில் செயல்படலாம் எனக் கூறும் கமலஹாசன், இந்த சகிப்பின்மையை எதிர்த்து தான் செய்யப் போகும் செயல் என்று எதுவும் கூறவில்லை.
இந்நேர்காணலில் தன்னை மதமற்றவர் என்று கூறிக் கொள்ளும் கமலஹாசன், இந்துத்துவா மதத்தீவிரவாதத்தை சகித்துக் கொள்கிறார். சகிப்பின்மைக்கு எதிராக விருதுகளைத் திருப்பித் தருபவர்கள், தாங்களும் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுரையும் கூறுகிறார். இதிலிருந்து, எந்த அளவுக்கு கமலஹாசன் மதவெறி வன்முறைகளை சகித்துக் கொள்கிறார் என்று புரிகிறது. கமலஹாசனைத் தமிழர்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
( கட்டுரையாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் )
ஆர்.எஸ்.எஸ். போலவே அகண்ட பாரதக் கனவில் கமலஹாசன் - தோழர் பெ.மணியரசன்
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்புNaam Tamilar Videos Total Collections | |
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment