GuidePedia

0

புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- செந்தமிழன் சீமான் அறிக்கை.

கடந்த 2011 ஆம் ஆண்டுத் தானே புயலால் பெரும் சேதத்தை அடைந்த கடலூர் மாவட்டம் தற்பொழுது பொழியும் வட கிழக்கு பருவமழை மற்றும் புயலால் மீண்டும் மாபெரும் சேதத்தை அடைந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்ட கடும் புயல், பெரும் மழை பாதிப்பால் இதுவரை 23 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். புயல் ,மழை காரணமாக 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதாகத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மழை நீர் வடிகால் கட்டமைப்பு,ஏரி- குளம் தூர்வாராத நிலை, பராமரிப்பு ஆகியவற்றின் குறைபாட்டினால் மக்கள் வசிக்கும் வீடுகளில் தண்ணீர் புகுந்து பல்லாயிரம் மக்கள் வீடுகளை இழந்து தெருக்களில் நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள் மூழ்கி, பாலங்கள் உடைந்து போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிப்படைந்துள்ளது. கடந்த 3 நாட்களாகப் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீர், உணவு கிடைக்காமல் பொது மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிர் நீராக இருந்து கோடைக்காலத்தில் குடிநீராகச் சேமிக்கப்பட வேண்டிய மழை நீர் உயிர் பறிக்கும் காட்டாற்று வெள்ளமாக மாறிப்போனதற்கு ஏற்கனவே இருக்கிற மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் தூர் வாரப்படாததும், ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கிற ஏரி குளப்பகுதிகள் இன்னும் அரசினால் மீட்டெடுக்க இயலா அவலநிலையுமே காரணங்கள் என்பதையும் நாம் இந்நேரத்தில் சிந்திக்க வேண்டும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வீசிய தானே புயலின் பாதிப்பில் இருந்து இன்றளவும் மக்கள் வெளிவராத சூழலில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதையாகத் தற்போதைய புயல் மழை சேதங்கள் கடலூர் மாவட்ட மக்களின் எதிர்காலத்தை இருட்டாக்கியுள்ளன. தமிழக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு போன்றவர்கள் துயர் நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தாலும் அப்பணிகள் முழுமையானதாகவோ,போதுமானதாகவோ இல்லை. தொடர்ச்சியாக இயற்கைச்சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மாவட்ட மக்களைத் துயர் இருட்டில் இருந்து மீட்டெடுக்க ஒவ்வொரு தமிழகக் குடிமகனும் கரம் கோர்த்து முன்வர வேண்டும் என இந்நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 2011 ஆம் ஆண்டுத் தானே புயலால் கடலூர் மாவட்டம் 5000 கோடி வரையிலான பொருளாதாரச் சேதத்தை அடைந்தது என்ற போதினும் மத்திய அரசு 1000 கோடி மட்டுமே நிதியுதவி அளித்தது. அதே போல இம்முறையும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்காமல் கடலூர் மாவட்ட மக்கள் அடைந்த இழப்பிற்கு உரிய நிவாரணத்தொகையை அளித்திட வேண்டும் எனக் கோருகிறேன்.

மேலும் மாபெரும் புயல் மழையால் ஏறக்குறைய அழிவின் உச்சத்தில் இருக்கும் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பிற்கு உள்ளான பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும், புயல் ,மழையில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணப்பணிகள் உரிய காலத்தில் சென்றடைய அரசு இயந்திரங்கள் மிக வேகமாகச் செயல்பட வேண்டும் எனவும், புயல் மழையில் இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தற்போது மாநில அரசு அளித்து வரும் நிவாரணத்தொகையோடு ,மத்திய அரசும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Videos Total Collections

காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Yearஇணைப்பு | Link
2016, 2017, 2018 ..........http://tamilcat.com/?p=13271
2015http://tamilcat.com/?p=13253
2014http://tamilcat.com/?p=13189
2013http://tamilcat.com/?p=13108
2012http://tamilcat.com/?p=13046
2011http://tamilcat.com/?p=13056
2010http://tamilcat.com/?p=13024
2009http://tamilcat.com/?p=13020
2008http://tamilcat.com/?p=13012
2007http://tamilcat.com/?p=13007
2006http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on "Add to Cart")

Post a Comment

 
Top