GuidePedia

0



சவுதி அரேபியாவில் திக்கற்று நிற்கும் தமிழர்களை காப்பாற்றுக: தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை

சவுதி அரேபியா நாட்டிற்கு பணியாற்றிக் கொண்டிருந்த அயல் நாட்டவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு சவுதி அரசு உத்தரவிட்டதையடுத்து, பிற நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களை, அந்தந்த நாடுகளின் அரசுகள் தங்கள் தூதரகங்கள் மூலம் உரிய உதவியை செய்து தங்கள் நாட்டிற்கு அழைத்துக்கொண்டன. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அங்கு பணியாற்றச் சென்ற பலரும் அங்கிருந்து வெளியேறி நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் திக்கற்று திரிந்துக்கொண்டிருக்கின்றனர்.

நித்தாகத் என்கிற சட்டத்தை நிறைவேற்றி, உள்ளுர் மக்களுக்கே வேலை என்று சவுதி அரசு முடிவு செய்த நாள் முதல் இந்தியாவில் இருந்து பணியாற்றச் சென்ற பல்லாயிரக்கணக்கானோர், மீண்டும் நாடு திரும்பக் கூட பணம் இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி திக்கற்ற 30 தமிழர்கள், நாட்டிற்குத் திரும்ப கையில் போதுமான பணமின்றி, இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு இதோ அதோ என்று ஒவ்வொரு நாளும் இந்தியத் தூதரகம் போக்குக்காட்டிக்கொண்டு இருக்கிறது. அவர்களோ தங்க இடம் கூட இன்றி, பகல் வேளைகளில் சாலைகளில் திரிந்துகொண்டிருந்துவிட்டு, இரவில் காவல் துறையினரின் கண்ணில் படாமல் மறைந்து வாழ்ந்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் உணவுக்கூட வழியற்ற காரணத்தினால், உயிரிழந்துள்ளார். அவருக்கு ஈம கிரியை கூட செய்ய முடியாமல் அப்படியே விட்டுவிட்டு மற்றவர்கள் வந்துவிட்டனர். மற்றொரு தமிழர் தனது நிலையை எண்ணி புலம்பி, புலம்பியே பைத்தியமாகியுள்ளார். அவர்கள் நமக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளனர். தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி, தங்களுக்கு ஒரு விடிவை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் பெயர், கடவுச் சீட்டு விவரங்களுடன் கூடிய பட்டியலையும், கடிதத்தையும் இணைத்துள்ளோம். தமிழக முதல்வர் அவர்கள், அம்மக்களின் துயர நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுக்கு தெரிவித்து உடனடியாக அவர்களை நாட்டிற்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்துத்தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Post a Comment

 
Top